July 1, 2022

இலங்கையுடனான பொருளாதார உறவுகள் உட்பட ஏனைய உறவுகளையும் துண்டித்து செயல்பட முடியாதென இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்து சிந்திக்க வேண்டியதொன்றாகும்.

இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்ப்பலைகள் என்பவற்றிற்கு மத்தியில், இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்ற தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகததின் தலைவர் வை. கோபாலசுவாமி, இலங்கையுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகளை முறித்துக்கொள்ளுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்காவிட்டால், சீனா இலங்கையில் கால்பதித்துவிடும் என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பிரதமரின் இந்த கூற்றானது, இலங்கை மீது இந்தியா உண்மையிலேயே கரிசணை கொண்டுள்ளது என்று இதுகால வரையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் மக்களின் மனங்களில் சற்று தளர்வினை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அத்துடன், பிராந்தியத்தின் பெரியண்ணாவாக விளங்க இந்தியா விரும்பவில்லை என்று அண்மையில் இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்த கருத்தினையும் பொய்யாக்கியுள்ளதாகவே தோன்றுகின்றது.

இலங்கையுடன் நீண்டகால நட்புறவு கொண்டுள்ள அயல்நாடான இந்தியா பல்வேறு ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகின்றதுடன், இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிகொடுக்க முன்வந்தமை குறித்தும் சிறுபான்மைத் தமிழர்கள் நன்றியுணர்வுடன் செயற்படுவார்கள்,

எனினும், பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் இந்த கூற்றானது, இந்தியாவின் இலங்கை மீதான கரிசணையை கேள்விக்குறியாக்கி இருப்பதுடன், சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதை எடுத்துக்காட்டுகின்றது.

இந்தியா இலங்கையின் நண்பனா? அல்லது பிராந்தியத்தின் பெரியண்ணாவா?

Leave a Reply

Your email address will not be published.