July 2, 2022

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சில பல சம்பவங்கள் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் இருப்பையும், அவர்களுக்கான உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையினரின் வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவற்றில் காணப்படுகின்ற விலைமதிப்பில்லா பொருட்கள் திருடப்படுகின்றமை போன்ற சம்பவங்கள் இந்த சந்தேகங்களை மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றவையாக உள்ளன.
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதில் அரசாங்கம் எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என ஒப்பீட்டளவில் நோக்கினால் விடை பூஜ்ஜியமாகத்தான் காணப்படுகின்றது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை காரணிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களைக் கூட உரியவாறு இதயசுத்தியுடன் முன்னெடுப்பதற்கு முடியாமல் போயுள்ளது.
ஆனால், அபிவிருத்தியைக் காட்டி எத்தனைக் காலத்திற்குத் தான் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியும் என்பதையும் சற்று அலசி ஆராய வேண்டியுள்ளது.
பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் பொறுப்புவாய்ந்த அரச தலைவர்கள், சில கடும்போக்குடைய சக்திகளை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு மீண்டுமொரு அமைதியின்மையை தோற்றுவிப்பதற்கு தூபமிடுகின்றதா என்ற அச்சம் பரவிவருகின்றது.
அண்மைக்காலமாக இரத்தினபுரி, தெனியாய, யாழ்ப்பாணம், மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் இந்து ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வட பகுதியில் தமிழ் வாழ்விடங்களில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள், இராணுவ பிரசன்னம், காணி சுவீகரிப்புகள் என்பனவும்,
கொழும்பில் கிராண்ட்பாஸ், கொஹுவல, மாளிகாவத்தை, கேகாலை, உட்பட 20 க்கும் அதிகமான முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளமை சிறுபான்மை இனங்களின் பரம்பலை குறைப்பதற்கான சூட்சுமமாகவும், ஒடுக்குமுறைக்கான முயற்சிகளாகவும் பலரது கருத்தாக காணப்படுகின்றது.
ஒரு இனமோ அல்லது சமூகமோ தொடர்ச்சியாக ஒடுக்கப்படும்போது, அந்த இனமோ அல்லது சமூகமோ தமது வாழ்வுரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் கிளர்ந்தெழும்புவது இயல்பானது…
இதனை எவருமே பயங்கரவாதம் என்றோ அல்லது தீவிரவாதம் என்றோ அர்த்தம் கற்பிக்க முடியாது…
இந்த பின்னணியை தோற்றுவிப்பவர்களை (கடும்போக்காளர்களை அல்லது அடிப்படைவாதிகளை) சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு அப்பாவியான பாதிக்கப்பட்டவர்களை மேலும் நசுக்குவது சிறந்த சூழ்நிலையை தோற்றுவிக்காது.
எல்லாவற்றிற்கும் மேலாக “இந்த நாடு இறைமையுள்ள ஒரே நாடு, யாவருக்கும் சொந்தமானது, எல்லாரும் சமத்துவமாகவும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது, இதனை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றெல்லாமு வெறும் வாய்ச்சவடால் விடுவது கேளிக்குரியதாகும்.
2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்து வருகின்ற தருணத்தில் நிபந்தனைகள் எந்தளவிற்கு செவிமடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க வேண்டும்.
அமெரிக்க தலைமையிலான பிரேரளை ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடந்தமுறை அமர்வின்போது நிறைவேற்றப்பட்டு அதிலுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த காலப்பகுதிக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நேரடியாக இலங்கைக்கு விஜயம் செய்து வடபகுதிக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன், இங்கிருந்து திரும்பிச்சென்றபோது, “இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது” என்ற கருத்தையும் சர்வதேசத்தின் கவனத்திற்கு விட்டுச் சென்றார்.
அத்துடன் அண்மையில் ஐநாவின் விசேட அறிக்கையாளர் சலோக்கா பெயானியும் நாட்டிற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.
இந்த நிலைமைகளின் கீழ், இம்முறை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திமுடித்ததாகவும், இங்கே யாவரும் ஒற்றுமையுடனும் சகல உரிமைகளுடனும் வாழ்வதான ஒரு மாயையை உலகிற்கு காட்ட முற்பட்ட ஒரு அரங்கேற்றம் நடந்தேறியிருக்கின்றது.
ஆனால் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடொன்றில் அதிகளவான அரச தலைவர்கள் இம்முறை பங்குபற்றவில்லை என்பதுடன், அதற்காக செலவிடப்பட்ட தொகையுட்பட நாட்டின் பிரஜையொருரின் படுகடன் தொகை மூன்று இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகம் என்ற உண்மையையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
போதைக்கு முற்றுப்புள்ளி என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்தஅரசாங்கத்தின் நிர்வாகத்தில் தான் நாட்டில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமது குறைபாடுகளை திசை திருப்புவதற்காக நாட்டில் முஸ்லிம் பயங்காரவாதம் இருப்பதாக கதைகளை பரப்புவதில் சில சக்திகள் திட்டமிட்டு இனப்பரம்பலை ஒடுக்குவதற்கான செயலில் ஈடுபட்டுள்ளனவா என்ற மனோநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமானதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.