July 2, 2022

Maithri vs Mahida

தனக்கு அரசியல் அச்சுறுத்தல் விடுக்கும் கூட்டணிகளையும், கட்சிகளையும் பிளவுபடுத்தவும்,  பலமிழக்கச் செய்வதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சுப் பதவிகளையும், ஏனைய சுகபோகங்களையும் வாரி வழங்கி எதிராளிகளை தம்பக்கம் இழுத்துக் கொண்டார்.

“எனது சலூன் கதவு திறந்தே உள்ளது. எவர் வேண்டுமானாலும் உள்ளே வரலாம். எவர் வேண்டுமானாலும் வௌியேறலாம்” என்று மஹிந்த மேடைகளில் ஏளனமாக கூறுவது வழக்கம்.

இவ்வாறு 2/3 பெரும்பான்மையுடன் தனக்கு சாதகமான முறையில், தமது அதிகாரங்களை மேலும் மேலும் அதிகரிப்பதற்கும், தனது குடும்பத்திடமே சகல அதிகாரங்களும் குவியும் வண்ணம் பாராளுமன்றம் ஊடாக சட்டங்களையும், ஏற்பாடுகளையும் நிறைவேற்றிக் கொண்டார்.

இதுவே நாட்டின் ஜனநாயத்தை கேள்விக்குட்படுத்தியதுடன், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான மைத்ரிபால மற்றும் சில அதிருப்தியாளர்கள் கடந்த அரசிலிருந்து வெளியேறி, 2015 ஜனவரி 8 ஆம் திகதி மஹிந்தவை தோற்கடித்து நல்லாட்சியை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தது.

ஆனால் இன்று நடப்பது என்ன?..

மஹிந்தவை முன்னிலைப்படுத்தி  அணிதிரண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள பொதுஜன முன்னணியை அடித்து நொறுக்குவதற்காக ஜனாதிபதி மைத்ரிபாலவின் சலூன் கதவு திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதை தவிர்ப்பதற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பலப்படுத்தவும் மஹிந்த பயன்படுத்திய அதே உத்தியை மைத்ரிபால சிறிசேன இப்போது பின்பற்றுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மைத்ரிபால சிறிசேனவும் இப்பொழுது தனது  சலூன் கதவைத் திறந்துள்ளார். அண்மையில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தமை,  தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம ஜனாதிபதிக்கு ஆதரவளித்து,   இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

கூட்டு எதிரணி உறுப்பினர்களில் இன்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் இணைவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

                     ++++++++++++++++++++
அப்படியானால் இவர்களுக்காக வழங்கப்படவிருக்கும் கெபினட் அமைச்சுப் பதவிகள், அமைச்சர் பதவிகள், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகள் எத்தனை???
வேறு திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகளின் தலைவர் பதவிகள் எத்தனை??? சொகுசு வாகனங்கள் எத்தனை???
சலுகைகள் எவை????
                     ++++++++++++++++++++

இதுவா நாம் எதிர்ப்பார்த்த நல்லாட்சி…?

தேர்தலில் முதலாவதாக கட்சியின் சின்னத்திற்கே மக்கள் வாக்குகளை அளிக்கின்றனர். அதன் பின்னரே விருப்பத் தேர்வுக்கு ஏற்ப வாக்குகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற பின்னர் கட்சிகளின் கொள்கைகளையும், மக்களையும் ஏமாற்றிவிட்டு  தங்களின் சுயலாபங்களுக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காவும் பேரம் பேசுகின்றவர்களுக்கு  சிறந்த பாடத்தைப் புகட்டி, தன்னலம் கருதாமல் தமக்கு சேவையாற்றக்கூடிய புத்திஜீவிகளையும், திறமையாளர்களையும் தெரிவுசெய்வது வாக்காளர்களின் கடமையாகும்.

#உள்ளூராட்சி_சபைத்_தேர்தல்_2018 #வாக்குரிமை #ஜனநாயகம் #SLPolitics #Democracy #Srilanka

Leave a Reply

Your email address will not be published.