July 1, 2022

 சர்வதேச சமூகமானது தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை கொண்டுள்ளது – ஐரோப்பிய தூதுக்குழுவினரிடம் சம்பந்தன் வலியுறுத்தல்..


ஐரோப்பிய நாடாளுமன்ற ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று (05) எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள், முன்னைய அரசாங்கமானது ஜனநாயக பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாவே தற்போதைய அரசாங்கமானது பதவிக்கு வந்துள்ளது என்றும், இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த அரசாங்கமானது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையில் சுமூக நிலைமையினை கொண்டுவருவதற்கு இணக்கப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பில் விளக்கமளித்த இரா சம்பந்தன் அவர்கள்,குறிப்பிட்ட பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் சுயமரியாதை, கெளரவம், மற்றும் இறைமை என்பவற்றை  அடிப்படையாககொண்டு ஒருமித்த பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் ஒரு தீர்வினையே நாம் வேண்டி நிற்கிறோம் என்றும் இதனை பூர்த்தி செய்வதற்கு அரசியல் யாப்பினை உருவாக்கும் கருமங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவான ஒரு தீர்வினை எட்ட வேண்டும் என்றும் கூறினார்.
புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது கருமங்களை தாமே முன்னெடுக்கக் கூடிய வகையில், அதிகாரங்கள் பகிரப்படுவதினையும்,அத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெற முடியாத வகையிலும், மத்திய அரசு அந்த அதிகாரங்களில் தலையிட முடியாத வகையிலுமான ஒரு கட்டமைப்பையே எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள்,இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மிகவும்நியாயமான  வகையிலேயேசெயற்படுகிறோம்என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த கருமங்களை அரசாங்கம் செய்ய தவறும்  பட்சத்தில்எம்மத்தியில்உள்ள தீவிர செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு உந்து சக்தியாக அமைவதோடு நாமும் மிக கடுமையான ஒரு நிலைப்பாட்டினை எடுக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம் எனவும் வலியுறுத்தினார்.
உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இரா சம்பந்தன் அவர்கள், தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தர மக்கள் குழுவாக பார்க்கப்படுவதன் நிமித்தம் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வேதனையடைந்தவர்களாக மட்டுமல்லாது, நிந்திக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.மேலும் அரசியல் கோரிக்கைகளை  முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துரைத்தார். இவற்றினால் இந்நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியாது என்ற நிலைப்பாட்டில் அநேக தமிழ் மக்கள் இந்நாட்டினை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்திய இரா. சம்பந்தன் அவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதில் காட்டப்படுகின்ற நீண்ட தேவையற்ற இழுத்தடிப்புக்கள் தொடர்பில் தமது  அதிருப்தியை தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், இந்த சட்டமானது நீக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
 தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர், பல கைதிகள் எந்தவொரு விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறைகளில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அத்தனை பேரும் மேலும் தாமதங்களின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் நிலைமாற்று கால நீதிபொறிமுறைகள், படையினர் வசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் செயற்பாடு மிக மந்த கதியிலேயே இடம்பெறுவதினையும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கமானது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேசத்தின் ஆதரவானது நிபந்தனைக்குட்பட்டது என்பதனை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்

எனவே இலங்கை அரசாங்கமானது தனது கடமையினை செய்ய வேண்டும் எனவும் அதிலிருந்து விலக  முடியாது எனவும் தெரிவித்தார்.  மேலும் சர்வதேச சமூகமானது தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை கொண்டுள்ளதனையும் இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்.
இரா. சம்பந்தன் அவர்களின் விவேகமான இராஜதந்திர நடைமுறை யதார்த்தமான தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்த ஐரோப்பிய பாராளுமன்ற  உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்துக்களுக்கு தாம் மிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் தமது சொந்த நாட்டு அரசாங்கங்களுடனும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எடுத்துரைப்பதாகவும் உறுதியளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.