திகன, ரஜவெல்ல பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து தந்தை, மகள் மற்றும் மகன் மூவரின் உடல்கள் தீயினால் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மெனிக்கின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஜவெல்ல இரண்டாம் குடியேற்ற கிராமத்தைச் சேர்ந்த இந்திக புஷ்பகுமார பிரேமதிலக்க (தந்தை 36), நவாஞ்சனா பிரேமதிலக்க (மகள் 13) மற்றும் கயான் பிரேமதிலக்க (மகன் 05) ஆகியோரே மர்மமான முறையில் தீயில் எரியுண்டு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை இரண்டு பிள்ளைகளுடன் நேற்று (09) இரவு அருகிலுள்ள வீடொன்றில் இடியப்பம் வாங்கிக் கொண்டு தமது வீட்டிற்கு சென்றதாகவும், புத்தாண்டை முன்னிட்டு பிள்ளைகளுக்கு புத்தாடைகள் கொள்வனவு செய்திருந்ததாகவும் பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளின் தாய் வெளிநாடு சென்றிருப்பதுடன், தந்தை அதிக கடன்சுமையுடன் இருந்ததாகவும், இதன் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மெனிக்கின்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.