July 3, 2022
இலங்கையின் உலர் வலய விவசாயத் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இலங்கையின் உலர் வலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குளம், கால்வாய் மற்றும் கிராமம் எனும் இணைந்த “எல்லங்கா கிராமம்” முறைமை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த உலக விவசாய மரபுரிமையாகவும் பெயரிடப்பட்டுள்ளது.
உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த புதிய உலக விவசாய மரபுரிமைகளை அடையாளம் காணும் சர்வதேச பேரவையினால் இத்தாலியின் ரோம் நகரில் நடத்தப்பட்ட விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையின் “எல்லங்கா கிராமம்” முறைமை விருதுக்குப் பாத்திரமானது.
ரோமிலுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமையகத்தில், உலகளாவிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உலக விவசாய மரபுரிமைகள் தொடர்பான விருது, உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மாரியா ஹெலேனா  செமெடோவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இலங்கையில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் இந்த திட்டம் வடிமைக்கப்பட்டு அமுலில் உள்ள இந்த திட்டத்திற்கான விருதை, உலர் வலய விவசாயிகளின் சார்பாக விவசாய அமைச்சின் செயலாளர் பீ. விஜேரத்ன பெற்றுக் கொண்டார்.
இந்த வருடம், சீனா, எகிப்து, ஜப்பான், கொரியா, மெக்சிக்கோ, போர்த்துக்கல், ஸ்பெய்ன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் 13 புதிய விவசாய உலக மரபுரிமைகள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த புதிய பிரகடனத்தை அடுத்து, 20 நாடுகளில் உலக முக்கியத்துவம் வாய்ந்த 50 உலக விவசாய மரபுரிமைகள் பெயரிடப்பட்டுள்ளன.

பெறுமதிவாய்ந்த விவசாய மரபுரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல், உயிர்ப் பல்வகைமை மற்றும் பாரம்பரிய அறிவை  பேணுதல் போன்ற நிலைபேறான சூழல் கட்டமைப்பை உருவாக்குவதே உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
#UNFAO #Food #Agri #SriLanka #lk


Leave a Reply

Your email address will not be published.