July 1, 2022
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள அபாயா சர்ச்சைக்கு நடுநிலையானவர்கள் ஒன்றிணைந்து தீர்வுகாண முயலவேண்டும் 
– ஊடகவியலாளர் கே.எம். ரசூல்
திருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் “அபாயா” அணிந்து செல்வதற்கு அதிபரினால் தடைவிதிக்கப்பட்ட சம்பவம் இந்தளவிற்கு பூதாகரமாக உருவெடுத்தமைக்கு இரண்டு சமூகங்களுமே காரணம் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
கலாசாரம் என்பது சகல இனப் பிரிவுகளுக்கும் இருக்கின்ற உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த கலாசாரத்தை தான் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சாராரை வற்புறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ எவருக்குமே உரிமையில்லை.
அதேபோன்று 100 வருடங்களாக இருக்கின்ற கலாசாரம் அடுத்த 100 வருடங்களுக்கும் அவ்வாறே பின்பற்றப்படுமா என்பதும் கேள்விக்குறியாகும். காலவோட்டத்திற்கு ஏற்ப கலாசார விழுமியங்களிலும் மாற்றம் ஏற்படாது என்று எவராலுமே 100% சரியாகக் கூறமுடியாது.
ஆனால், எமது கலாசாரப் பாரம்பரியங்கள் காலா காலத்துக்கும் அழியாமல் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாகும்.
இந்த பின்னணியில் இஸ்லாமியர்களின் கலாசாரங்கள் அண்மைக்காலமாக பேரினவாத சக்திகளால் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கப்படும் அதேவேளை, அது தொடர்பான பல்வேறு விமர்சனங்களையும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும், அவர்களின் உயிர் உடைமைகளை அழிப்பதற்கும் ஏதுவாக உருவெடுத்திருந்தமை அண்மைக்கால சம்பவங்களை நோக்கும்போது கண்கூடு.
நாட்டின் ஒருபகுதியில் அடிவாங்கி விட்டு மீள இயல்புநிலைக்கு திரும்பும்போது மற்றுமோர் இடத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சுகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முடினாற்போன்று ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்வது தூபம் போடுபவர்களுக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது போன்றாகிவிடுகின்றது.
இந்த சூழ்நிலையில் என்னுடைய மிக நெருங்கிய இந்து சகோதரர்கள் கூட ஒரு கணம் நிதானம் இழந்து இன ரீதியான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது.
நடுநிலை காக்கவேண்டியவர்கள் கூட சரி பிழை பார்க்காமல், ஆழ்ந்து ஆராயாமல் கருத்துகளையும், வெறுப்புப் பேச்சுகளையும் கக்கியது மேலும் வேதனையளிக்கின்றது.
ஒரு சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பொறுப்பைக் கொண்டிருக்கும், தெய்வமாக போற்றப்படும் கல்வி சமூகத்தினர் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும்.
பிறப்பில் இஸ்லாமியன் என்றாலும், வளர்ப்பிலும் சரி, சேர்க்கையிலும் சரி நான் தமிழனாகவே இருக்கின்றேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் எனது மதச் சுதந்திரத்தை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அதேபோன்று மற்றவர்களின் மதச் சுதந்திரங்களுக்கு இடையூறு விளைவித்ததும் இல்லை.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என சகலரதும் கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதற்கு நான் கற்றுக்கொண்ட பாடசாலையும், எனக்கு கல்வி போதித்த ஆசான்களும், குறிப்பாக தமிழ் ஆசிரியர்களே காரணமாக திகழ்கின்றனர்.
சகல கலாசாரங்களும் ஒருசேர அமைந்த பாடசாலை நான் கற்ற கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி. இந்த பாசறையில் கற்ற மாணவர்களாயினும் சரி, பாடத்தைப் போதித்த ஆசான்களாயினும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் மீது வெறுப்பூட்டும் பேச்சுகளையோ அல்லது இன ரீதியான பாகுபாடுகளையோ காட்டியதில்லை என்பதை பெருமிதமாக கூறிக் கொள்கின்றேன்.
எல்லோரையும் போன்று நானும் அதுசரி, இதுசரி அல்லது அது பிழை, இது பிழை என்று விமர்சிக்கவோ, வாதிடவோ தயாரில்லை.
அதேபோன்று திருகோணமலை ஶ்ரீ சண்முகா தமிழ் கல்லூரியின் அபாயா விவகாரத்திற்காக, புங்குடுதீவு மாணவி வித்தியாவை தரம் தாழ்த்தியும், ஏனைய பெண்களின் சாரி அணிதலை கொச்சைப்படுத்தியும் மிகவும் மட்டமான முறையில் ஆத்திரமூட்டும் பதிவுகளை முஸ்லிம் சகோதரர்கள் சமூக வலைதளங்களில் இடுவதை​யும் ஒரு இஸ்லாமியனாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இந்த விடயத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற சகலரும் அணிதிரண்டு அடுத்த தலைமுறையின் நலன்கருதி ஒரு சமாதானத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.

Leave a Reply

Your email address will not be published.