மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் 24 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் வாழுகின்ற மக்ககள் தத்தமது மாவட்டங்களுக்கு வௌியில் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் வட பகுதிக்கு சென்றிருந்த சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்திருந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த போதகரை சந்தித்த மற்றும் அவருடன் பழகிய அனைவரும் அடையாளம் காணப்படும் வரையில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதேச மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.