July 1, 2022

கொரோனா வைரஸ் பரவுகையால் நிர்கதிக்குள்ளான இலங்கையர்களுக்கு 16 நிவாரணத் திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிர்கதிக்குள்ளாகியுள்ள நாட்டு மக்களுக்காக, தனக்குரிய அதிகாரங்களின் பிரகாரம் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இந்த நிவாரண உதவித்திட்டங்கள் உடனடியாக இன்று முதல் (23) நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் செயலாளர்கள், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியினால் மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவித் திட்டங்கள் பின்வருமாறு:

01) வருமான வரி, வெட் வரி, வாகன சாரதி அனுமதிப் பத்திர புதுப்பித்தல், 15,000 ரூபாவிற்கு குறைவான நீர், மின்சார கட்டணங்கள், வரி அறவீடுகள், வங்கி காசோலை செல்லுபடியாகும் காலம், 50,000 திற்கும் குறைவான கடன் அட்டை அறவீடுகளை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

02) லீசிக் அடிப்படையில் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்தவர்களுக்கான மாதாந்த குத்தகை கட்டணத்தை செலுத்தும் காலம் 6 மாதங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

03) அரச மற்றும் தனியார் துறையல்லாத ஊழியர்களின் சம்பளத்தை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொண்ட மாதாந்த கடன் தொகை அறவீடுகள் 2020ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

04) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து 10 லட்சம் ரூபாவிற்கு குறைவான தொகையை கடனாக பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அறவிடப்படும் மாதாந்த கொடுப்பனவு தொகையை மூன்று மாதாங்களுக்கு அறவிடாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

05) தொழிலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபாவை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

06) கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதார, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கான ”அக்ரஹார” காப்புறுதித் திட்டம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

07) சுற்றுலா, ஆடை, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்காக 6 மாத  கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான நிதியை இலங்கை மத்திய வங்கி வழங்குகின்றது.

08) இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன ஒன்றிணைந்து திறைசேரி முறிகளுக்கான நிதி முதலீடுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அதிலிருந்து நிதி வர்த்தகத்திற்கு 7 வீத வட்டி விகிதத்தை உறுதிப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

09) மாதாந்த கடன் நிதியான 50,000 ரூபா வரை உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் கடன் அட்டைகளுக்கான கடன் வட்டி வீதத்தை 15 வீதமாக்குவதுடன், மாதாந்தம் குறைந்தது 50 வீதமான கடனையே அறிவிடவும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அனைத்து வங்கிகளின் கிளைகளும், வாடிக்கையாளர்களுக்கு இயலுமான அளவு சேவையை வழங்கும் வகையில் திறந்து வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

11) இலங்கை துறைமுகம், சுங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு அத்தியாவசிய உணவுகள், உரம், மருந்து வகைகள் மற்றும் எரிப்பொருள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12) சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் கூட்டுறவு கடனட்டை உரிமையாளர்களுக்காக 10,000 ரூபா வட்டியற்ற மேலதிக தொகையை அனைத்து கூட்டுறவு வங்கிகளின் ஊடாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

13) லங்கா சதொச மற்றும் கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் வெட் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகளை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14) குறைந்த வருமான மட்டத்தினருக்கு போஷாக்கு உணவு வகைகளை வழங்குவதற்குப் பதிலாக, சமுர்த்தி அதிகார சபை மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்காக உரிமையாளர் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும். அந்த குடும்பங்களில் முதியோர் அல்லது குறைந்த வருமானத்தை பெறுவோர் இருப்பார்களாயின் அவர்களுக்கு அரிசி, பருப்பு. வெங்காயம் ஆகியவற்றுக்கான உணவு சான்றிதழை வாராந்தம் வழங்க வேண்டும்.

15) கொவிட்-19 வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கும், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி நிதியத்தினால் விசேட வங்கிக் கணக்கொன்று இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவியாளர்கள் இதற்கான உதவிகளை வழங்கும் போது, அவர்களுக்கான வரி மற்றும் அந்நிய செலவணி கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16) சார்க் நாடுகளின் கொரோனா நிதியத்திற்காக இலங்கை அரசாங்கம் சார்பாக 05 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.