நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும், வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (24) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அந்த மாவட்டங்களில் மீண்டும் நாளை (24) நண்பகல் 12 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் வியாழக்கிழமை (26) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அத்துடன் அன்றைய தினமே நண்பகல் 12.00 மணிக்கும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும்.
இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் வௌியாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்வதையும் அரசாங்கம் தடைசெய்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலாயினும், விவசாயிகள் தடையின்றி செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.