July 2, 2022

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்து நேற்றைய தினம் (03) முதல் கடைசியாக பதிவாகிய 11 பேரில் 03 பேர் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கைக்குள் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 162 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 02 பேரும் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலும், மற்றையவர் சிலாபம் பகுதியில் வைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வௌிநாட்டவர்களுடன் நெருக்கமாகப் பழகிய ஒருவரும், இந்த அடையாளம் காணப்பட்டவர்களில் அடங்கியுள்ளதுடன், களுத்துறை பகுதியில் மூடக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரும், அக்குரணை பகுதியில் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகிய மேலும் 02 பேரும் கடைசியாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவரை 131 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 25 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.