கொவிட்-19 வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான சார்க் அமைப்பின் அவசர நிதியத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
சார்க் அமைப்பின் செயலகத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து பாகிஸ்தானின் நிதியுதவி வழங்கும் தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிதியத்தை முழுமையாக சார்க் செயலகமே கையாள வேண்டும் என்பதுடன், நிதி பயன்படுத்தப்படும் விதம் குறித்து சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடுகளுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வர வேண்டும் என்றும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் செயலார் நாயகம் எசல வீரக்கோன் மற்றும் பாகிஸ்தானின் வௌிவிவகார செயலாளர் சொஹைல் மஹ்மூத் ஆகியோரிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவரான பாகிஸ்தான், சார்க் அமைப்பு பிராந்தியத்தின் கூட்டுறவுக்கு இன்றியமையாத ஒரு அங்கமாகும் என்று பாகிஸ்தான் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.