July 4, 2022

மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி (20-04-2020) திங்கட்கிழமை முதல் அந்தந்த மாவட்டங்களிலும், மாவட்டங்களுக்கு உள்ளாகவும் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்துதல் மற்றும் தளர்த்துதல் தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் அன்றைய தினமே இரவு 8 மணிக்கும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

அதன் பின்னர் இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை நாளாந்தம் இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் அலவத்துகொட, அக்குரண பொலிஸ் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பொலிஸ் பிரிவிலும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களிலுள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும்  அமுல்படுத்தப்படும்.

  • கொழும்பு மாவட்டம் – கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கோதட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொஹுவல.
  • கம்பஹா மாவட்டம் ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை.
  • புத்தளம் மாவட்டம் – புத்தளம், மாரவில, வென்னப்புவை
  • களுத்துறை மாவட்டம் – பண்டாரகம, பயாகல, பேருவளை, அளுத்கம.

இதற்கமைய கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொதட்டுவ, முல்லேரியாவை, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை, கொஹுவல, ஜாஎல, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவில, வென்னப்புவை, பண்டாரகம, பயாகல, பேருவளை, அளுத்கம, வரக்காபொல, அக்குரண, அலவத்துகொட மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட மாட்டாது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனுமொரு பிரதேசத்தில் அல்லது அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டால், அந்த பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் எவரேனும் பிரவேசிப்பதற்கு அல்லது அங்கிருந்து வௌியேறுவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக பிரதான வீதிகள் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு தொழிலுக்காக செல்வதற்கு மாத்திரம் பிரதான வீதிகளில் போக்குவரத்துகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு…,

Leave a Reply

Your email address will not be published.