July 2, 2022

கண்டி மாவட்டத்தில் இதுவரை 20 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இருந்து புதிதாக 13 நோயாளர்கள் கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊடகப் பேச்சாளரும், மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

இந்த 13 பேரில் கடற்படைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடற்படையில் இருந்து விடுமுறைக்காக வீடு திரும்பியவர்களே இவ்வாறு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதிதாக அடையாளம் காணப்பட்ட 13 பேரும் சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டிப் பிரதேசத்தின் ஹதரலியத்த, நாவலப்பிட்டிய, கம்பளை, தலாத்துஓயா, பம்பரதெனிய, பூஜாபிட்டிய, நுகவெல உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்தே 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

குறிப்பாக ஹதரலியத்தவில் 03 பேரும், நாவலப்பிட்டியவில் 02 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்றுநோய் தடுப்புக்கான வைத்தியசாலைக்கு இவர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் மிகவும் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளைக் கையாள்வதுடன், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் பொது இடைவௌியைப் பேணுதல் போன்ற ஆலோசனைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும்.

அத்துடன் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் ஏதேனும் தொடர்புகள் ஏற்பட்டிருந்தால், அல்லது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிப்பதன்மூலம் உரிய ஆலோசனைகளைப் பெறலாம் எனவும் டொக்டர் அர்ஜுன திலகரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.