July 4, 2022

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

த பினான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து இன்று (03) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.
மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியுறுதல் மற்றும் அத்தகைய நிதி நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் காரணமாக அரசாங்கம் அதிருப்திக்குள்ளாகி இருப்பதுடன், இதனால் அரச நிதி நிறுவனங்கள் தொடர்பிலான மக்களின் நம்பிக்கை பழுதடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக சட்டங்களை உருவாக்கி அல்லது அத்தகைய நிதி மோசடிகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, த பினான்ஸ் நிறுவனத்தின் பண வைப்பாளர்களின் நிதியை மீள் செலுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைப்பாளர்களில் 97 வீதமானவர்களின் பணத்தை செலுத்தி முடிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் எச்.ஏ. கருணாரத்ன இதன்போது குறிப்பிட்டார.
எஞ்சியுள்ள 3 வீதமானவர்களின் பணத்தை பின்னர் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கிவரும் நிதி நிறுவனமொன்று மக்களின் பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரண கேட்டுக் கொண்டார்.
அத்துடன் த பினான்ஸ் நிறுவனத்தில் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், அந்த நிறுவனம் தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் வகையில் அறிக்கைகளை வௌியிட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பிரசன்னமாகிய அமைச்சர் பந்துல குணவர்தனவும் கருத்துகளை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.