July 1, 2022

அலுத்கம, தர்காநகர் பகுதியில் தாரிக் அஹமட் என்ற 14 வயதுடைய ஓட்டிசம் குறைபாடுடைய சிறுவனான தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன.

தாரிக் அஹமட் தனது 4 வயதுமுதல் ஓட்டிசம் எனப்படும் ஒருவகை மன இறுக்க குறைபாடுடையவராக இருப்பதாகவும், அவர் 6 வயது பிள்ளையின் மன வளர்ச்சியையே கொண்டிருபபதாகவும் மருத்துவவர்கள் கூறியுள்ளனர்.
இந்த பின்புலத்திலேயே கடந்த மே 25 ஆம் திகதி புனித ரமழான் நோன்புப் பெருநாள் தினத்தன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவியுள்ள கொவிட்-9 பரவல் காரணமாக அன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில், தாரிக் அஹமட் சைக்கிளில் வீதியால் பயணித்தபோது, அம்பகஹ சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே சைக்கிளை மோதியுள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த சில சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் சிறுவனை அழைத்துச் சென்று கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பதிவாகியுளள CCTV காணொளி, தாரிக்கின் உடலில் தாக்கப்பட்ட காயங்கள் மற்றும் முழுமையான தகவல்களையும் அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீதான இனவெறிக்கு எதிராக இன்று உள்நாட்டில் குரல்கள் எழுப்பப்படும நிலையில், எமது சொந்த நாட்டிலும் அநீதி, சமத்துவமின்மை மற்றும் வன்முறைக்கு எதிராக எமது குரல்களை அமைதியாக எழுப்ப வேண்டும் என்றும் அலிசாஹிர் மௌலானா தனது டுவிட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் சிறுவன் தாரிக் அஹமட்டின் வீட்டிற்கு விஜயம் செய்து அந்த சிறுவன் தொடர்பில் மேலும் விபரங்களை அலிசாஹிர் மௌலானா ஆராய்ந்தறிந்துள்ளார்.
இது தொடர்பாகவும் தனது டுவிட்டரில் அவர் நிழற் படங்களுடன் பதிவிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
இது இவ்வாறிருக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் சிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தாரிக் அஹமட் மீதான துஷ்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பவம் தொடர்பான பூரண விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் கொவிட்-19 தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஶ்ரீலங்கா பொலிஸ் ஆற்றிவரும் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளதுடன், இத்தகைய சம்பவத்தினால் அந்த அர்ப்பணிப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், 14 வயது சிறுவன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனுடைய மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் காத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுவன் தாரிக் அஹமட் மீதான துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான CCTV காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டிருந்த நிலையில், பிரதான ஊடகங்கள் இந்த சம்பவத்தை இதுவரையில் கண்டுகொள்ளாமல் இருப்பதும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தாரிக் அஹமட்டுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காக எவரும் இதுவரை முன்வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் விமர்சனங்களை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையிலுள்ள பெரும்பாலான ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் மௌனமாக இருந்துவரும் ஒரு சூழ்நிலையில், ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி முதல்முறையாக அதனை காணொளி செய்தியாக பதிவேற்றி, தகவலை வௌிக்கொண்டுவந்துள்ளதை முன்னிட்டு, KandyTamilNews அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றது.

காணொளி செய்தியைக் காண்பதற்கு

Leave a Reply

Your email address will not be published.