July 1, 2022

கொவிட்-19 வைரஸ் பரவுவதன் காரணமாக நாடளாவிய ரீதியாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி சார் நிறுவனங்கள் முறையாக இயங்கமுடியாமல் முடங்கிப் போயுள்ளன.

இந்த நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடசாலைக் கல்வியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், பெற்றோர் எவ்வளவு தான் முயன்றும் சரியான கற்றல் வழிகாட்டல்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகின்றது.
கல்வி நிலையில் வீழ்ச்சியை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இணையவழி கற்றல் முறையை ஆசிரியர்கள் மூலமாக அமுல்பபடுத்தியது. எனினும் வசதி படைத்த குடும்பங்களிலேயே மடிக் கணினிகள், அதி நவீன கைத்தொலைபேசிகள் உள்ளன. அத்துடன் நகரங்களில் உள்ளவர்கள் மட்டுமே இணையவசதியை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
வட மாகாணத்திலே முல்லைத்தீவு மாவட்டம் இணைய வழிக் கல்வியால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிடலாம். ஏனெனில் இங்கு வாழும் குடும்பங்களில் அதிகமானோர் நாட்கூலி வேலைகளில் ஈடுபட்டு பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுகின்றார்கள். அத்தகைய குடும்பங்களில் இணைய வழிக்கல்வி கிடைக்காத மாணவர்களும் காணப்படுகின்றனர்
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே உடையார்கட்டு கிராமத்தில் “சமிக்ஞை” கிடைப்பதே அரிதாக காணப்படுகிறது. உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவர்கள் “சிக்னல்” (சமிக்ஞை) என்ற வார்த்தையின் மதிப்பினை நன்கறிவார்கள். அதுமட்டுமா கணினி பாட ஆசிரியர் பல்கலைக்கழக விண்ணப்பப் படிவம் நிரப்புகையில் ” சப்மிற்” என்றதை எத்தனை தரம் கொடுக்க வேண்டியிருந்தது என்பது மற்றுமொரு விடயமாகும். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு ”டவர்” (சமிக்ஞை கோபுரம்) எங்கள் கிராமத்திற்கு அருகில் இல்லாததால் “சிக்னல்” சரியாக கிடைப்பதில்லை என்றும் விளக்கமளித்தார்.
மாணவர்களுக்கு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தொழில்நுட்பம் பற்றிய பூரண அறிவு எத்தனை பெற்றோர்களிடத்தில் இருக்கின்றது என்பது கேள்விக்குறியாகும். அப்படியிருந்தும் அவர்கள் பிள்ளைகளாவது கற்றுக் கொள்ளட்டுமே என்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் போதுமான எண்ணிக்கையில் “டவர்”கள் அமைக்கப்படாமையால் “ஸ்மாட் போன்” இருந்தும் கூட “சிக்னல்” இல்லாமையால் பிள்ளைகளின் இணையவழிக் கல்வி தடைப்படுவதை எண்ணி பெற்றோர் வருந்துகின்றனர்.
அதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்களிடம் பாடங்கள் தொடர்பான “சந்தேகங்களைக்” கேட்டுக்கொண்டிருக்கையில் திடிரென்று பலத்த காற்றின் இரைச்சல் கேட்டால் “சிக்னல்” தேடி காணியின் ஒரு கோடியில் அமரந்திருக்கிறேன் என்று சமாளிக்கவும் வேண்டும். இதிலும் “பைல் அடாச்” (கணினியில் கோவைகளை இணைத்தல்) பண்ண வேண்டும் என்றால் அது பதிவேற்றம் செய்து முடிவதற்குள் காலம் போயிடும் என்று சலித்தக்கொள்ளும் நிலைக்கு உடையார்கட்டு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உடையார்கட்டு மாணவர்கள் எவ்வளவு தடைகள் இருந்தாலும் விடாமுயற்சியோடு கற்று வெற்றியும் பெற்றுள்ளார்கள். தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் பயணிப்பாளர்கள் என்பதும் திண்ணம். கரையில்லாத கல்வியை குறையில்லாமல் கற்றால் உலகம் நம்மை வாழ்த்தி வணங்கும்.
(தகவலும், படமும் – சுரேஷ் டிரோஜா)

Leave a Reply

Your email address will not be published.