July 4, 2022
“மனித அறிவிற்கு தேவையான அறிவு நூல்களை வைத்துக்கொண்டு நூலகங்களை வெறுமனே மூடி வைப்பதால் எவருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே பேரதானை பல்கலைக்கழகத்தில் பொது மக்களும் பயனடையும் வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்” என பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக வளவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன நூலகக் கட்டடத் திறப்புவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட உபவேந்தர் உபுல் திசாநாயக்க, சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக நூலகத்தின் புதிய நூலகரான இராசையா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க, பல்கலைக்கழக பதிவாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.
உபவேந்தர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பேராதனை பல்கலைக்கழகத்தின் நூலகம் சுமார் நூற்றாண்டு பழைமை வாய்ந்தது என்பதுடன், அடுத்த வருடத்தில் (2021) தனது நூறு வயதை இந்த நூலகம் நிறைவுசெய்கின்றது. 

துணைவேந்தர்,
பேராசிரியர் உபுல் திசாநாயக்க
இந்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகத்தில் மன்னர்கள் காலந்தொற்று பல வரலாற்று நூல்கள், மன்னர்களால் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட பல்வேறு ஆவணங்கள், சரித்திர சம்பவங்களை உள்ளடக்கியதும், சன்னஸ் உறுதிப் பத்திரங்கள், அறிவுப்புகள் அடங்கிய ஓலைச் சுவடிகள், சுவடிகளில் எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷ நூல்களும் அடங்கியுள்ளன.
இதுமட்டுமல்ல பண்டைய கால வைத்திய முறைகள் தற்போதைய வைத்திய முறைகள் உட்பட சுமார் 8 இலட்சம் பல்வேறு அறிவுசார் நூல்களும், 2600 ஓலைச்சுவடிகளும் இங்கு பாதுகாப்பாக இந்த நூலகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஏராளமான நூல்களைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளின்றி அவை கட்டுக் கட்டாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தில் போதிய இடவசதிகள் இன்மையாலேயே சுமார் 360 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலகக் கட்டடம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆறு மாடிகளைக் கொண்ட இந்த புதிய கட்டடத்தில் நூலக நிர்வாகம் உட்பட மாநாட்டு மண்டப வசதிகளும் நூல்களை வாசிக்கக்கூடிய வசதிகளும் அமையப்பெற்றுள்ளதுடன், நவீன டிஜிட்டல் முறையிலான நூல்களை பாதுகாக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமே தங்களின் அறிவுத்தேடலுக்காக நூல்களை வாசித்து வருகின்றனர். இதனை ஏனையோரும் பயன்பெறும் வகையில் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன் பிரகாரம் முதலில் பிரதேச ஊடகவியலாளர்களின் நலன்கருதி அவர்களுக்கான நூலக அங்கத்துவத்தை வழங்குவதற்கு நடவடிககை எடுத்துள்ளோம். 
எதிர்வரும் காலத்தில் பொது மக்களும் பேராதனை பல்கலைக்கழக நூலகத்தில் வாசித்துப் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்த நூலகம் பல்கலைக்கழக வகுப்பு நாட்களில் காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்னும் பேராசிரியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் எட்டாவது நூலகராக நியமிக்கப்பட்டுள்ள இராசையா மகேஸ்வரன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த நூலகமானது நூல்களை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு அறிவுக் களஞ்சியமாகும். வாசிப்பதன் மூலம் ஒரு மனிதன் புனிதனாக மட்டுமல்ல ஒரு நடமாடும் நூலகமாகவும் விளங்குகிறான்.
புதிய நூலகர், இராசையா மகேஸ்வரன்
தவறான வழியில் செல்லக்கூடிய இளைஞர்கள் நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தலைசிறந்த நற்பிரஜையாக திகழமுடியும்.
அதேவேளை, இலக்கிய வாதிகளுக்கும், வரலாற்று நூல்களை சரித்திர ஆய்வு உட்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு பல்கலைக்கழக நூல் நிலையங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அந்த அடிப்படையில்தான் முதலாவதாக ஊடகவியலாளர்களுக்கு அதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வகையில் நூலக அங்கத்துவர்களாக இணைத்துக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளேன்.
பல்கலைக்கழக நூலகத்தில் நூல்களை களஞ்சியப்படுத்துவதற்குப் போதிய வசதிகள் இன்மையால் சுமார் 35 வருடங்களாக புதிய நூலகக் கட்டடம் ஒன்றினை அமைத்துத் தருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க அவர்களே சுமார் 360 கோடி ரூபா செலவில் இந்த புதிய ஆறு மாடிக் கட்டடத்தை பெற்றுத் தந்துள்ளார். 
இந்த நூலகத்தின் நூற்றாண்டு வரலாற்றில் உபவேந்தர் உபுல் திசாநாயக்கவின் பெயரும் பதிவாகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published.