July 1, 2022

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற மகுடத்தை சூடியுள்ள ஊடகவியலாளர்கள் வழங்கும் செய்திகள் எவ்வாறு அமைய வேண்டும்? இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்லின, பல்கலாசார, பலமதங்களை பின்பற்றும் நிலையில், முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை முன்வைக்கலாமா? ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஊடக நிறுவனங்களும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.

ஒரே செய்தி இரு மொழிகளில் வெளியாகும்போது இருவேறுபட்ட மொழிபேசும் மக்களின் மனோநிலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதோடு, இம்மாதம் 23ஆம் திகதி நிறைவடையவுள்ளது. வழமைபோன்று அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டு, அதற்கு இலங்கை பதிலளிக்கும். பின்னர், அமர்வின் போது இரு தரப்பினரும் உத்தியோகபூர்வதாக அறிக்கைகள் தொடர்பாக உரையாடுவார்கள். அந்த வகையில் இம்முறையும் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டமை, முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தடை விதிக்குமாறு தனது அறிக்கையினூடாக உறுப்பு நாடுகளிடம் ஆணையாளர் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பயணத் தடை விதிப்பதற்கும் அவர் யோசனை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

இந்த அறிக்கையை முற்றாக நிராரித்த இலங்கை அரசாங்கம், இலங்கையர்களை இலக்கு வைத்து தடை விதித்தல், பயணத் தடைகளை விதித்தலால் இறையாண்மை உள்ள நாட்டின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்திருந்தது.

குறிப்பிட்ட இந்த செய்தி தமிழ் பத்திரிகையொன்றில், ‘’பாச்லெட்டின் அறிக்கை அரசியல் மயமானது. பதில் அறிக்கையில் இலங்கை கடும் கண்டனம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளதோடு, அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் செய்தி உள்ளடக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘’ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டு: அரசின் எதிர்ப்பு அறிக்கை எழுத்து மூலம் சமர்ப்பிப்பு” என்ற தலைப்பில் இன்னொரு தமிழ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேசெய்தி சிங்கள பத்திரிகையொன்றில், ‘’மிச்செல் பாச்லெட்டின் தீய திட்டத்திற்கு கோட்டாவின் கண்டனம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதற்கு பல உப தலைப்புகளும் இடம்பெற்றுள்ளதோடு, குறிப்பாக ஒரு உப தலைப்பில் ‘’அரசாங்கம் சமர்ப்பித்த 19 பக்க அறிக்கையினால் மிச்செல் பாச்லெட்டின் ஆடை களையப்பட்டது” என தலைப்பிடப்பட்டுள்ளது.

இதே பத்திரிகையில், இதே செய்தியுடன் தொடர்புடைய செய்திகள் தொடர்ச்சியாக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, இந்த அறிக்கை பிழையானதென இக்கட்டுரையை எழுதியவர் தீர்மானித்துவிட்டார். அடுத்ததாக அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் ஊடக ஒழுக்கநெறியை அப்பட்டமாக மீறுவதாக அமைந்துள்ளது. இச்செய்தியை வாசிப்பவரின் மனநிலை எவ்வாறு மாறும் என்பதை நாம்  நினைத்துக்கொள்ளலாம்.

முஸ்லிம் மக்களின் ஜனாசா எரிப்பு தொடர்பான செய்திகளிலும் இதே நிலை காணப்பட்டது. தமிழ் செய்தி ஊடக அறிக்கையில், ‘’கடும்போக்கு சிங்களவரை திருப்திப்படுத்தவே ஜனாசா விவகாரம்” என தலைப்பிடப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்றில், சடலங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு இந்த நாட்டை கல்லறையாக மாற்ற போராடும் அசாத் சாலி போன்ற தீவிரவாதத்தை தூண்டும் அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு செய்திகளுமே மக்கள் மத்தியில் சீற்றத்தையும் வெறுப்புணர்வையும் தோற்றுவிக்கும் வகையில் வடிபமைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

இதேபோன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தமிழர் எழுச்சி பேரணியாக பொதுவாக அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், சிங்கள பத்திரிகைகளில், அந்த பேரணியில் கலந்துகொண்டவர்களை கைதுசெய்யக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட மற்றுமொரு பேரணிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அத்தோடு, வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் குழுவினர் தொடர்பாக உளவுத்துறை விழிப்புடன் உள்ளது’, நீதிமன்ற அறிவிப்பை மதிக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத பேரணி’ என்ற தலைப்புகளில் செய்திகள் வெளிவந்தன. இதில் இனவாத பேரணி போன்ற சொற்கள் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடு.

அடுத்ததாக குருந்துமலை விவகாரத்தை நோக்கினால் அங்கு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தமிழ் பத்திரிகைகள் அதற்கு முன்னுரிமை வழங்கின. சிங்கள பத்திரிகைகளோ வடக்கில் சிங்களவர் வாழ்ந்தமைக்கான சாட்சியாக கல்வெட்டு கிடைக்கப்பெற்றதாக செய்தி வெளியிட்டன. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் சிங்கள செய்தி அறிக்கையிடல்கள் யார் உண்மை என போட்டிப்போட்டுக்கொண்டு ஓடிய நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.  இக்காலப்பகுதியில் தமிழ் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி ‘சீனாவுக்கும் சிங்களவர்களுக்கும் குடாநாட்டினுள் 3000 ஏக்கர் காணிகள்” என்று தலைப்பிட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடுவது எந்தளவிற்கு பொருத்தமானது? மக்களின் உணர்வை தூண்டி இவர்கள் எதனை சாதிக்க முனைகின்றனர்? இவ்விடயங்கள் தொடர்பாக தேசிய சமாதான பேரவையின் தலைவரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரரா மூன்று காரணங்களை குறிப்பிட்டார்.

  1. சில ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றன. அதனால், அரசாங்கம் செய்யும் சகல விடயங்களையும் நியாயப்படுத்த முனைகின்றனர். மறுபக்கத்தில் பார்த்தால், எதிர்க்கட்சிக்கு சார்பாக சிலர் செயற்படுகின்றனர். அரசியல் கட்டமைப்பிலிருந்து பார்ப்பதால், அவர்கள் எந்தநேரமும் அரசாங்கத்தின் பிழைகளை மாத்திரம் தேடிக்கொண்டிருப்பார்கள்.
  2. ஒரு இடத்திலிருந்து கிடைக்கும் செய்திகளை ஏனைய மூலங்களோடு ஒப்பிட்டு அதன் உண்மைத்தன்மையை (Fact check) உறுதிப்படுத்த சரிபார்க்கவேண்டும். அந்த செய்திக்கு மறுபுறம் உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். ஊடகவிலாளர்களுக்கு காணப்படும் துறைசார் அறிவு, தொழில்வாண்மை, தொழிநுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளில் இது தங்கியுள்ளது.
  3. பாரியளவான மாற்றமொன்றை ஏற்படுத்தும் அரசியல் அதிகாரம் தமக்கும் உள்ளதென ஊடகவியலாளர்கள் நினைக்கின்றனர். அவர்கள் நல்லதென நினைக்கும் திசைக்கு நாட்டை வழிநடத்த நினைக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒருபுறத்தின் கருத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மறுபுறம் மூடி மறைக்கப்படுகின்றது. 

கலாநிதி ஜெஹான் பெரேரரா

இந்த மூன்று விடயங்களுமே இவ்வாறான போக்கிற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார். எனினும், இனமுறுகலை ஏற்படுத்தும் இவ்வாறான செய்தி அறிக்கைகளை கட்டுப்படுத்துவது அவசியம். இதுபற்றி தொடர்ச்சியாக அவரிடம் வினவியபோது,

‘’ஊடகவியலாளர்களுக்கு தொழில்முறை பயிற்சியளிப்பது முக்கியம். தொழிநுட்ப அறிவை விருத்திசெய்ய வேண்டும். ஒருசெய்தியை எடுத்தால் அதன் சகல பக்கங்களையும் ஆராய வேண்டும். இவ்வாறு ஆராய்ந்து ஏனைய பக்கங்களை ஊடகவியலாளர்கள் அறிந்துகொண்டாலும்கூட அதை வெளியிடுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் பணிபுரியும் ஊடக நிறுவனத்தின் தலைவர் அல்லது ஆசிரியருக்கு ஒரு அரசியல் கருத்தியல் உண்டு. அது அரசாங்கம் சார்பாகவோ எதிர்க்கட்சி சார்பாகவோ அல்லது தமிழ் தரப்பிற்கு சார்பாகவோ இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுக்கும் தாம் நினைக்கும் செய்தியை வெளியிட முடியாது.

பிரித்தானியா போன்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அங்கு அரச ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்றனர். அவர்களை சுதந்திரமாக இயங்கவிடுகின்றனர். இப்போது பிபிசியை எடுத்துக்கொண்டால் அவர்கள் கட்சி அரசியலுக்கு துணைபோகமாட்டார்கள். எமது நாட்டிலும் ரூபவாஹிணி, லேக் ஹவுஸ் மற்றும் தினமின போன்றவற்றை சுயாதீனமாக்கலாம். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனை செய்வதில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு செய்தியில், வடக்கில் சிங்களவர்களுக்கு 3000 ஏக்கர் காணிகள்’ என்றுள்ளது. அதில் உண்மையும் உள்ளது. வடக்கில் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தை அரசாங்கம் சுவீகரித்து சிங்களவர்களுக்கு கொடுப்பதாக அந்த மக்கள் பார்க்கின்றனர். இதே விடயம் சிங்கள பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றது. ஆனால் சிங்கள பிரதேசங்களில் இடம்பெறும்போது அதனை இனவாதமாக பார்ப்பதல்லை. ஆனால், வடக்கில் இடம்பெறும்போது அதனை இனவாதமாக நோக்குகின்றனர். முஸ்லிம் பிரதேசத்திலும் இந்த நிலை உள்ளது. சிங்கள மக்கள் பரம்பரையாக பயன்படுத்திய இடத்தை அரசாங்கம் சுவீகரிக்கின்றது. ஏழை விவசாயிகளின் நிலத்தை சுவீகரித்து சில நிறுவனங்கள் போன்ற தமக்கு தேவையானவர்களுக்கு வழங்குகின்றது. இந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரராக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலவேளைகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால், தமிழ் ஊடகங்கள் இந்த செய்தியை வழங்கியுள்ள விதம், ஒருபக்கம் சார்ந்தது. இதனை பொதுவான பிரச்சினையாக நோக்குவதில்லை. சிங்கள பிரதேச செய்திகள் வடக்கிற்கு செல்வதில்லை. இது ஒரு குறைபாடாக உள்ளதோடு, சமநிலையற்றதாகவும், ஒரு விடயத்தின் முழுமையான பக்கத்தை வெளிப்படுத்தாத நிலையும் காணப்படுகின்றது. இரண்டு தரப்பிலும் இக்குறைபாடு உள்ளது. இதனை வாசிக்கும் மக்களுக்கும் ஒரு பக்க செய்தி மாத்திரம் செல்லும்போது, அங்கு பிரச்சினை ஏற்படுகின்றது. ஆகவேதான் மக்களுக்கும் செய்திகளை ஆராய்ந்து அறியும் விதத்தை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். 

ஊடக நிறுவனங்களின் அரசியல் நோக்கு வெவ்வேறானவை. அந்த அரசியல் ரீதியான பார்வை ஊடாகத்தான் பல செய்திகள் அறிக்கையிடப்படுகின்றன” அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் சர்வதேச ஊடக ஒத்துழைப்பு மையத்தின் ஆசிய பிராந்திய ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரங்க கலன்சூரிய குறிப்பிட்டார். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரங்க கலன்சூரிய

அடுத்ததாக சந்தை நோக்குநிலை இதில் தாக்கம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதாவது தமது பத்திரிகையை யார் வாங்குகின்றனர் என்பதை இலக்குவைத்தும் இவ்வாறு எழுதப்படுவதாக குறிப்பிட்ட ரங்க கலன்சூரிய, இப்படி எதை நோக்கமாக வைத்து எழுதினாலும் இந்த இரண்டு கோணங்களும் கோட்பாட்டளவில் பிழை என அவர் சுட்டிக்காட்டினார்.

‘’இவ்வாறான நிலையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகப்பெரிய பிரச்சினை. ஒரு நாட்டில், ஒரே செய்தி, ஒரே பார்வையில் வெவ்வேறு மொழிகளில் அறிக்கையிடப்படுவதில்லை. இப்பிரச்சினை இன்று நேற்றல்ல, தொடர்ச்சியாக இடம்பெற்றாலும் பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால் தொடர்ச்ச்சியாக எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்” என்றார்.

ஊடக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் சுய ஒழுக்க விதிகள் ஆகியவவற்றை உள்ளடக்கிய ஊடக ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டு இதனை நடைமுறைப்படுத்த மற்றும் ஒழுங்கமைக்க 2003இல் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் நிறுவப்பட்டது. பத்தரிகை நிறுவனங்களில் அவர்கள் பின்பற்றும் வகையில் ஒழுக்கக் கோவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனினும், அரசியல் மற்றும் பொருளாதார நோக்குநிலைகள் குறிப்பிட்ட ஊடக உள்ளீடுகளில் பிரதிபலிக்கின்றன. எமது நாட்டில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்த பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு இருக்கின்றபோதும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கு என்ன காரணம் என வினவினோம்.

நீங்கள் கூறியதுபோல பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு செயற்திறன் இல்லாமல் உள்ளது. அதனை செயற்திறனாக்க வேண்டுமாயின் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதனை சீர்படுத்த முடியாது. காரணம் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு சுய ஒழுங்குமுறை அமைப்பு சரியாக அமையாதென நாம் நம்புகின்றோம்” என்றார்.

கமல் லியனாராச்சி

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அதிகாரியும் இலங்கை பத்திரிகை பேரவையின் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஒருங்கிணைப்பாளருமான கமல் லியனாராச்சி, ஒரு சம்பவம் தொடர்பான அறிக்கையிடலின்போது இனத்தை வெளிப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாளாந்த செய்திகளில் சில சந்தர்ப்பங்களில் இனத்தை அடையாளப்படுத்தப்படுத்தப்படுவதை நாம் காணலாம். ஐ.நா. ஆணையாளரின் செய்தியில் நீங்கள் ஒரு விடயத்தை பார்க்கலாம். குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின், அதை எழுதியவரின் மனப்பான்மை அந்த செய்தியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாம் உண்மையின் பக்கம் சார்ந்து அறிக்கையிடுகையில், எமது நிறுவனம் அல்லது தனிப்பட்ட சிந்தனையை அடிப்படையாக கொண்டு செய்தி அறிக்கையிட முடியாது. நாட்டில் முன்னுரிமை அடிப்படையில் பார்த்தல் அதில் எத்தனை பேர் தேசப்பற்றாளர்கள் போன்றோர் உள்ளனர், அவர்களுக்காக நாம் பணியாற்றுகின்றோம் எந்த சிந்தனை உள்ளது. அதுதான் இந்த செய்திகளில் பிரதிபலிக்கின்றது. நாம் நாட்டுக்காக பணியாற்றுகின்றோம் என கூறிக்கொண்டு எழதும் தனிப்பட்ட அம்சங்களையே இங்கு காணமுடிகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆசிரியருடன் கலந்துரையாடி சுட்டிக்காட்டினாலும், சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே அது நிறைவேறுகின்றது. ஆகவேதான், சிறந்த ஊடக செயற்பாட்டை ஊக்குவிக்கின்றோம்” என்றார்.

உணர்வுரீதியாக மக்களை தூண்டிவிடும்போது, பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் அவை முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கின்றன என்ற விடயத்தை ஊடக நிறுவனங்களாக இருந்தாலும் ஊடகவியலாளர்களாக இருந்தாலும் அவதானிப்பது அவசியம். டிஜிட்டல் ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியிலும்கூட, பத்திரிகைளுக்கான மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கின்றமைக்கு மக்கள் அச்செய்திகளை நம்புவதே காரணமாகும். பத்திரிகை செய்திகளில் நம்பகதன்மை அதிகம் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில், அச்செய்திகளை வக்கிர சிந்தனையுடன் சித்தரித்து பிளவுகளை உருவாக்குவது ஊடகவியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

 

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

Leave a Reply

Your email address will not be published.