2021 ஐக்கிய நாடுகளின் உணவு உச்சிமாநாட்டிற்கு முன்னோடியாக “தேசிய உணவு முறைமைகள் தொடர்பான சம்பாஷணையை விவசாய அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையில் நிலைபேறான உணவு முறைமைகளை உருவாக்குதல் சார்ந்த சவால்களை கண்டறியும் நோக்கில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினால் “தேசிய உணவு முறைமைகள் தொடர்பான சம்பாஷணை” க்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதனிடல், விநியோகம், நுகர்வு, அப்புறப்படுத்தல் அடங்கலாக நாட்டில் நிலைபேறான உணவு முறைமைகளை உருவாக்குதல் சார்ந்த சவால்கள் தொடர்பில் இந்த சம்பாஷணை இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் அமைச்சு ஆகியன விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஷாக்கின்மை தொடர்பான பிரச்சினைகள், சகலருக்கும் பாதுகாப்பும் போஷாக்குடையதுமான உணவை கிடைக்கச் செய்வதில் காணப்படுகின்ற சலாவ்கள் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் இந்த வருடம் நடைபெறுள்ள 2021 ஐநா உணவு உச்சிமாநாட்டிற்கு முன்னோடியாக இலங்கையில் நடைபெற்ற இந்த சம்பாஷணையை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹனா சிங்கர்,, “ஐநா செயலாளர் நாயகம் கூட்டியுள்ள உச்சி மாநாடானது 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தசாப்த கால திட்டத்தின் ஓரம்சமாகும் எனக் குறிப்பிட்டார்.
நிலைபேறான உணவு முறைமைகளுக்காக தத்தமது வழிமுறைகளைக் கண்டுபிடித்து இத்தகைய பிரத்தியேக சவால்களை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அங்கத்துவ நாடுகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவதாக ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மேலும் கூறினார்.
#UNO #WFO #Lk #SriLanka #Sustainable #Food #System #Agriculture #news