ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23-06-2021) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது சபையின் முதலாவது கடமையாக புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் இடம்பெறவுள்ளது.
இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதுடன், தேசிய ப்ட்டியல் மூலம் ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற்றிருந்தது.
இந்த ஆசனத்தின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஒருவர் நியமிக்கப்படாதிருந்த நிலையில், கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு அந்த கட்சியின் செயற்குழு இறுதித் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
கடந்த 40 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தி, ஐந்து தடவைகள் பிரதமராகவும், பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்த அனுபவசாலியாக ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
– நன்றி CeylonMail