நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (05-07-2021) அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்கவியலாளர்கள் நாளாந்த சேவையில் ஈடுபடவில்லை என எமது செய்தியாளர் கூறுகிறார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கைக்கு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாட்டின் பல பாகங்களில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களும் ஆதரவளித்துள்ளனர்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து ஆய்வுகூடப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
எனினும் உயிர்காக்கும் அவசர சேவைகளுக்கு நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் சேவையாற்றுவதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.