July 4, 2022

சீன-இலங்கை உறவுகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு 1000 ரூபா நாணயக்குற்றியை இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டது.

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தி ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1000 ரூபா நாணயம், உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று (06) கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புதிய நாணயக் குற்றியை மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்தார்.

சீனா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக இந்த நினைவு நாணயம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. 

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீன தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகமும், மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கின் முன்புற தோற்றமானது, நாணயத்தின் மத்தியிலும் காட்சியளிக்கிறது. 

கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் “இலங்கை – சீனா 65 ஆண்டுகள்” என்றும் நாணயத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபுறத்தில் 1000 ரூபா மற்றும் “சீன கம்யூனிஸ்ட் கட்சி” என மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு நாணயக் குற்றிகளில், 500 தங்க நாணயங்களும், 2000 வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.