தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து பலர் கைதுசெய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கபபட்டமை தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து பொலிஸ் மாஅதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோர் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றபோதிலும், ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பலவந்தங்கள் குறித்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துச் சுதந்திரம் குறித்து பிரஸ்தாபித்துள்ள அந்த சங்கம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்துகளை தெரிவிப்பதற்கும் அரசியல் யாப்பின் 14(1) (அ), (ஆ) மற்றும் (இ) சட்டவிதிகளில் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
அத்துடன் கொவிட் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களில் பல்வேறு உள்ளக மற்றும் புற செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், Spa நிலையங்களைத் திறத்தல், சுப்பர் மார்க்கட்கள் மற்றும் ரெஸ்டுரண்ட்களைத் திறத்தல் என்பவற்றிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கும், வௌியில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களில் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வௌிக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ் மாஅதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.