July 4, 2022

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டிற்குள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே திட்டமிடப்பட்டதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மேலோட்டமாகவும், உண்மையை மூடிமறைக்கும் விதத்திலும் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பில் இன்று (13-07-2021) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கர்தினால் குறிப்பிட்டார்.

எனினும், இந்த தாக்குதல் நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைமைகளுக்கு தாம் விடயங்களை எடுத்துக்கூறியிருந்ததாக அவர் கூறினார்.

எந்தவொரு ஆட்சியாளரும் இதுவரையில் அந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்பதுடன், மேலோட்டமாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

ஒருசிலரை மாத்திரம் கைதுசெய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  உண்மைகளை மூடிமறைக்க கூடாது எனவும் கர்தினால் வலியுறுத்தினார்.

உயி்ர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? எதற்காக இதனை திட்டமிட்டார்கள்? என்ற விடயங்களை நாட்டின் எதிர்கால சந்ததியின் நலன்கருதி வௌிப்படுத்துவது அவசியமாகும் எனவும்,  அதற்காக சுயாதீனமான ஓர் கட்டமைப்பின் கீழ் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்க லேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத்தவிர, ஒரு சிலர் மீது மாத்திரம் வழக்குகளை தாக்கல் செய்து கண்துடைப்பு மேற்கொள்ள இடமளிக்க முடியாது என்றும், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் 22 பக்கங்கள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டமைக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்வது தமது உரிமையாகும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.