July 4, 2022
ஓய்வுபெற்ற பிரதி அதிபர் அருள்நந்தி ராஜாரஞ்சிற்

கடந்த 34 வருடங்களாக கல்வித்துறையில் பல்வேறு பரிணாமங்களில் சேவையாற்றிய அல்வாய் தெற்கு மாலிசந்தியைப் பிறப்பிடமாகவும், அருள்நந்தி, கமலாதேவி தம்பதியின் புதல்வருமான அருள்நந்தி ராஜாரஞ்சித் மே மாதம் முதல் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இறுதியாக கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியின் பிரதி அதிபராக சேவையாற்றிய நிலையில் அவர் கடந்த மே மாதம 11 ஆம் திகதி முதல் கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.
செல்லையா பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட வதிரி வடசென்றல் கல்லூரியில் தரம் 1 தொடக்கம் 7 வரை ஆரம்பக் கல்வியைப் பயின்ற பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8 முதல் 13 வரை பாடசாலைக் கல்வியை ராஜாரஞ்சிற் கற்றார்.
கணித பிரிவில் கல்வியைக் கற்ற அவர், உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவாகி பட்டப் படிப்பை 1985 ஆம் ஆண்டில் நிறைவுசெய்தார்.
பாடசாலையில் கல்வி கற்ற காலப்பகுதியில் பாடசாலை கெடெட் அணியிலும், கால்பந்தாட்ட அணியில் 13, 15, 17 மற்றும் 19 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழான அணிகளில் விளையாடி பல்வேறு வெற்றிகளுக்கு பங்காற்றியுள்ளார்.
1987 ஆம் ஆண்டில் புத்தளம் சாஹிரா கல்லூரியில் முதல் நியமனம் பெற்று 1990 ஆம் ஆண்டு வரை அங்கு கடமையாற்றிய பின்னர், 1990 ஆம் ஆண்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு வரை கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.
அதன் பின்னர் சிறிதுகாலம் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் சேவையாற்றியதை அடுத்து, 1998 ஆம் ஆண்டு முதல் 2021 மே மாதம் 11 ஆம் திகதி ஓய்வுபெறு்ம வரையில் 23 வருடங்களாக கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லுரியில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
விஞ்ஞான பட்டதாரியான ராஜாரஞ்சிற், பட்டப்பின் கல்வி டிப்ளோமா கல்வியை தேசிய கல்வி நிறுவனத்தில் பெற்றுக் கொண்டதுடன், 2009 ஆம் ஆண்டில் அதிபர் சேவைக்குத் தெரிவாகி 2015 ஆம் ஆண்டில் தரம் 1 அதிபராக பதவியுயர்வு பெற்றார்.
பௌதிகவியல் பாடத்துறையைப் போதித்த இவர் பல மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். அத்துடன் பௌதிகவியல் பட்டதாரிகள் தமிழ் ஆசிரியர் சங்க தலைவராகவும், அகில இலங்கை பௌதிகவியல் பட்டதாரிகள் சங்க பௌதிகவியல் பாட பரீட்சை வினாத்தாள் தயாரித்தல் மற்றும் பரீட்சையை நடத்துதலில் முன்நின்று உழைத்தார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பௌதிகவியல் விடைத்தாள் திருத்தும் பணியில் 15 வருடங்கள் , மேலதிக பிரதம பரீட்சகராக 15 வருடங்கள், புள்ளித்திட்ட தயாரிப்பில் 15 வருடங்கள் என பல்வேறு துறைகளில் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இதேவேளை, தனது சேவைக்காலத்தில் கண்டி மாவட்ட ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப் பயிற்சி நெறி விரிவுரையாளராகவும், மத்திய மாகாண பௌதீகவியல் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியில் சேவையாற்றிய காலத்தில் கல்லூரி ஒழுக்கத்துறைக்குப் பொறுப்பாளராகவும், நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த விவேகானந்தா சபை பரீட்சை, கலைவிழா, சரஸ்வதி பூசை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.
இவரது சேவைக்காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளும், உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திகளும் பாடசாலைக்குக் கிடைத்தமை முக்கியமானதாகும்.
– கண்டி நிருபர்

Leave a Reply

Your email address will not be published.