July 4, 2022

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை​யை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழக அரசு சார்பாக சிறப்புக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தமிழக அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலுள்ள சிறுபான்மையினர்களின் நலன் மற்றும் வௌிநாடுகளில் வாழும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், மதுரை மாநகராட்சி, புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதிக்கு சென்றிருந்தார்.  அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இலங்கை அகதிகள் தொடர்பாகவும் கருத்துகளை கூறினார்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் அகதிகளுக்காக புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் எனவும், அதிமுக சரியாக ஆட்சி செய்யத் தவறியதால் மக்கள் திமுக வை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக செஞ்சி கே.எஸ். மஸ்தான் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு சார்பில் சிறப்புக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.