July 2, 2022

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTIC) பாராளுமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் கல்வித் தகைமைகள் பெற்றுக் கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை பகிரங்கப்படுத்துமாறு RTIC பாராளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை வௌியிடுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களின் கல்வித் தகைமைகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கோரப்பட்டிருக்கவில்லை என அதிகாரிகள் பதிலளித்ததை அடுத்தே ஆணைக்குழு கல்வித் தகைமைகள் பெற்றுக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை வௌியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஊடகவியலாளரான எஸ். ரூபதீசன் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு (RTIC) செய்த மேன்முறையீட்டை அடுத்தே, ஆணைக்குழு பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த கம்மன்பில, ஆணையாளர்களான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவா, நீதிபதி ரோஹிணி வல்கம மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற மேன்முறையீடு மீதான பரிசீலணையின் பின்னரே ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தகவல் அறியும் உரிமையின் கீழ் (RTI) கோரிக்கையை விடுத்திருந்த ஊடகவியலாளர் எஸ். ரூபதீசன், பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு எதிராக குற்றவியல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என வினவியிருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூன்றாவது உறுப்புரையின் முதலாவது உபவிதியின் கீழ் அத்தகைய தகவல் தமது பொறுப்பில் அல்லது நிர்வாகத்தின் கீழ் இல்லையென்றதன் அடிப்படையில் பாராளுமன்ற தகவல் உத்தியோகத்தர் கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன், பெயர் குறிப்பிட்டிருந்த அதிகாரியும் தகவல்களை வழங்குவதை நிராகரித்தருந்தார்.

இதனடிப்படையில் ஊடகவியலாளர், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு (RTIC) மேனமுறையீடு செய்திருந்தார்.

பொதுமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கல்வித் தகைமை மற்றும் குற்றவியல் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்வதற்கு வாக்காளருக்கு உரிமையுள்ளதாக இந்தியாவின் வழக்குத் தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி ஆணைக்குழுவின் தீர்ப்பில் தௌிவிபுடுத்தப்பட்டுள்ளது.

மேன்முறையீடு பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளபபட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதுகுறித்து கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

கோரப்பட்டிருந்த தகவல்களை வழங்குவதற்கு விரும்பினால் பிரஜைகளின் கோரிக்கைக்கு ஏற்ப கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் தொடர்பான தகவல்களை தனக்கு வழங்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அந்த கடிதத்தில் கோரியிருந்தார்.

இதன் பிரகாரம் கோரிக்கைக்கு பதில் கிடைத்தவுடனேயே ஆணைக்குழுவிற்கு பிரதிசெய்வதுடன் மேன்முறையீடு செய்த ஊடகவியலாளருக்கும் தகவல்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்த தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு, அந்த தகவல்களை பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பகிரங்கப்படுத்துமாறு பாராளுமன்றத்தை அறிவுறுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின் ஆங்கிலப் பிரதி கீழே தரப்பட்டுள்ளது, 

நன்றி 

– மீடியா எல்.கே 

– த சண்டே டைம்ஸ்

Leave a Reply

Your email address will not be published.