July 2, 2022

இலங்கையில் நகர்ப்புற உணவுக் கழிவு சார்ந்த சவாலை சமாளிக்கும் தேசிய திட்டத்திற்கு உலக உணவு விவசாய ஸ்தாபனம் சுற்றுச்சூழல் அமைச்சுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது.

நகர்ப்புற உணவுக் கழிவு சார்ந்த சவாலை எதிர்கொள்ளும் முயற்சியில் நகர்ப்புற உணவுக் கழிவுகள் தடுப்பு மற்றும் வீடுகள், உணவு சேவைகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கான குறைப்பு தொடர்பான தேசிய செயல்திட்ட வரையறையொன்றை சுற்றுச்சூழல் அமைச்சிற்காக உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தயாரித்துள்ளது.

நாட்டின் நகர்ப்புற உணவுக் கழிவுகளை திறம்படச் சமாளிப்பதற்கான ஆதாரன அடிப்படையிலான மூலோபாயத்தையும், தௌிவான இலக்கினையும் இந்த செயற்றிட்டம் வகுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபன தொழில்நுட்ப ஒத்துழைப்புச் செயற்றிட்டம் ஊடாக இந்த மூலோபாயத்தை வகுப்பதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை தினசரி 7000 தொன் திண்மக் கழிவுகளை தோற்றுவிப்பதாகவும், அதில் 65 – 66 சதவீதம் அழிந்துபோகக்கூடிய கரிமப் பொருட்களைக் கொண்டுள்ளதாகவும் தேசிய செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்தியத்திலுள்ள மூன்று முக்கிய கழிவகற்றும் மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை உணவு விவசாய ஸ்தாபனம் மற்றும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் ஆகியன இந்த செயற்றிட்டத்திற்காக பகுப்பாய்வு செய்துள்ளன.

இதன்படி கொழும்பு மாநகர சபைப் பிரதேசத்தில் தினசரி உற்பத்தி செய்யப்படும் மொத்த திண்மக் கழிவுகள் 706 தொன் என்பதுடன், அதில் 50 சதவீதமான 353 தொன் உணவுக் கழிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

(KandyTamilNews)

Leave a Reply

Your email address will not be published.