May 18, 2022

பிரச்சினையே இல்லாமல் வாழ்க்கை இல்லை. நமக்கு மட்டும் தான் வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் என்று சகித்துக் கொள்பவர்கள் நிறைய பேரை நாம் சந்தித்திருப்போம். அவ்வாறானவர்கள் கண்ணை திறந்து  நம் சமூகத்தை ஒருமுறை பாருங்கள். பலவித மனிதர்கள் நம்மை சுற்றி வாழ்கிறார்கள். ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு  வகையில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. ஆனால் அவரவர் தகுதிகேற்ப எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பிரச்சினை. பிரச்சினைகளில் தான் சென்றுக்கொண்டிருக்கிறது மனித வாழ்க்கை.

வாழ்க்கை செலவுகள் அதிகரித்த இக்காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கே சிரமப்படுகின்றார்கள். இருந்தும் பிறரிடம் கையேந்தாமல் கிடைக்கும் வருமானத்தில் நிறைவாக சந்தோஷமாக வாழும் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அண்மையில் ஒரு குடும்ப பெண்ணை சந்திக்க நேரிட்டது. நான்கு பிள்ளைகளின் தாயான அவர் எங்களுடன் பகிர்ந்துக் கொண்ட விடயங்கள் வருமாறு;

எனது பெயர் லக்மாலி .வயது 51. பிபிலை  தான் எனது சொந்த இடம். எனது தாய் தந்தைக்கு நான் ஒரே பிள்ளை. 25வயதில் எனக்கு குடும்பத்தினரால் செய்து வைத்தார்கள். நான் திருமணம் முடித்து எட்டாவது வருடத்தில் எனது அம்மாவும் அப்பாவும் வாகன விபத்தொன்றில் இறந்து விட்டார்கள். எனக்கு  நான்கு  பிள்ளைகள் .நான்கும் பெண் பிள்ளைகள். கணவன் பேரூந்து ஓட்டுநராக கடமையாற்றினார் .  நான் இல்லத்தரசியாக இருந்தேன்.   கடந்த பத்து  வருடங்களுக்கு முன் எனது கணவன்  சுகயீனம் காரணமாக  இறந்து விட்டார்.  இப்போது குடும்ப பொறுப்பு முழுமையாக தனியாளாக நானே ஏற்கவேண்டி இருக்கிறது.  பத்து வருடங்களாக இடியப்பம் விற்கும் தொழிலை செய்து வருகிறேன் . இடியப்பம், இட்லி, வடை, தோசை, போன்றவற்றை வீட்டில் செய்து கடைகளுக்கு கொடுத்து வியாபாரம் செய்து வருகிறேன்.  இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்ப செலவை சமாளித்து வருகிறேன்.

இந்த வியாபாரத்தில் உங்களுக்கு இலாபம் கிடைக்கிறதா?

பெரிய அளவில் இலாபம் இல்லை என்றாலும் அன்றாட செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் போதுமான உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலேயே நான்கு பிள்ளைகளினதும் படிப்பு செலவு உட்பட வீட்டு செலவு,மின் கட்டணம், நீர் கட்டணம போன்றவற்றை செலுத்தி வருகிறேன். இன்றைய காலத்தில் தனி ஒருவரின் வருமானத்தில் நான்கு  பிள்ளைகளையும் படிக்க வைப்பது என்பது கடினமான காரியம் அல்லவா…

நீங்கள் செய்யும் இந்த உணவுப் பண்டங்கள் முழுமையாக விற்கப்பட்டு விடுமா? விற்கப்படாத சந்தர்ப்பத்தில் என்ன செய்வீர்கள்?

சில நேரங்களில் எல்லா உணவுகளும் விற்கப்பட்டு விடும்.சில நேரங்களில் மிஞ்சி விடும் .இவ்வாறான சமயங்களில் கடையிலிருந்து மிஞ்சிய உணவுகளை பெற்று கொண்டு வந்து வீட்டில் கோழிகள்,ஆடு வளர்ப்பதனால் அவற்றுக்கு உணவாக அளிப்பேன்.

உணவு பொருட்களை தயாரித்து விற்று வரும் வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இருக்கின்றதா?

இதை மட்டும் தொழிலாக செய்யவில்லை. எங்களுடைய வீட்டில் குறைந்தபட்சம் பதினைந்து தென்னைமரங்கள் நிற்கின்றன. அதிலிருந்து விழும் தென்னோலைகளை எடுத்து காய வைத்து ஈக்கில் தடி  தயாரித்து அருகில் உள்ள கடைகளுக்கு விற்று வருகின்றேன். மாதம் ஒன்றுக்கு முப்பது ஈக்கில்தடிகள் சரி விற்றுவிடுவேன்.

கணவர் இல்லாததால் குடும்ப கஷ்டத்தை எப்படி உணர்கிறீர்கள்..

ஒரு குடும்பத்தில் கணவன் தான் தமது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைத்து குடும்ப பெண்களது ஆசை ஆகும். அதே போல்  தான் எனது கணவர் இருக்கும் போது நான் குடும்ப கஷ்டங்களை அவ்வளவு உயர்ந்ததில்லை. இப்போது குடும்ப கஷ்டமும் அவர் இல்லாத கவலையும் சேர்ந்து துன்புறுத்துகின்றது.

தற்போதைய Covid -19 கால சூழலில் உங்களுடைய வருமானம் எப்படி உள்ளது.?

சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு வருமானம் பெற்றவர்களுக்கே இக்காலம் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் நாளாந்த வருமானத்திற்கே பெரும் கஷ்டப்படும் எந்நிலையை கூறவா வேண்டும்…. ஊரடங்கு சட்டம் காரணமாக எல்லா கடைகளும் மூடப்பட்டுள்ளது. நான் யாருக்கு உணவு பொருட்களை விற்பது? ஈக்கில் தடி வேண்டுமென்றால் ஒன்றிரண்டு வீட்டுக்கு வந்து வாங்கிக்கொண்டு போவார்கள்.  கடவுள் ஆசீர்வாதத்தால் யாரிடமும் கையேந்தாமல் நாளாந்தம் சாப்பிட்டு வாழக்கூடிய அளவுக்கு இருக்கின்றோம்.

உங்களுக்கு இக்கால பகுதியில் அரசாங்கத்தால்  உதவிகள் ஏதும்  வழங்கப்படுகின்றதா?

பெரிய அளவில் உதவி என்று எதுவும் சொல்லமுடியாது. கொரோனா முதலாம் அலையின் போது இரண்டு தடவைகள் 5000/- பணம் வழங்கப்பட்டது. ஒரு முறை 2000/- ரூபா பணம் வழங்கப்பட்டது. அவ்வளவு தான் உதவி. கஷ்டத்தில் தான் வாழ்கின்றோம்.

உங்களுடைய எதிர்கால ஆசை என்ன?

நான்கு  பிள்ளைகளையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வருவது தான். மூத்த மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றாள்.இரண்டாவது மகள் உயர் தரத்தில் கணித பிரிவிலும் , மூன்றாவது மகள்சாதாரண தரத்திலும், நான்காவது மகள் தரம் எட்டிலும் படிக்கின்றார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு சரி அவர்களை படிக்க வைத்து நல்ல ஒரு தொழிலை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை.நான் படும் கஷ்டங்களை எனது பிள்ளைகள் ஒருபோதும் படக்கூடாது.

கணவனை இழந்த இப் பெண் குடும்ப கஷ்டம் என்றாலும் தனக்கான ஒரு தொழிலை பெற்று நம்பிக்கையோடு குடும்பத்திற்காக உழைக்கும் இப் பெண்ணின் தைரியம் பாராட்ட வேண்டியதொன்றாகும். இக் கொரோனா காலப்பகுதி மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றாலும் நாளாந்த சாப்பாட்டுக்கு கூட பெரும் கஷ்டத்திற்கு முகங்கொடுத்து குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இந்த அம்மாவின் கதை உதாரணமாக அமைகின்றது.

 

ந.திஸ்னா குமாரி

நான்காம் வருடம்

ஊடக கற்கைகள் துறை | யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published.