COVID19 பரபுவதையிட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகள் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், ஒக்டோபர் 1 முதல் 31 வரையான காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிக்காட்டல்களை சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ளார்.
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் 31 வரையில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை பொது ஒன்றுகூடல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளக மற்றும் வௌி விருந்துபசாரங்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நேர ஒதுக்கீட்டின் அடிப்படையில் சலூன்கள் இயங்கமுடியும் என்றும், 50 வீத கொள்ளளவுடன் முன்பள்ளிகளைத் திறப்பதற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 1 முதல் 15 திகதி வரை திருமண நிகழ்வுகளுக்கு 10 பேர் கலந்துகொள்ள அனுமதியுள்ளதுடன், COVID அல்லாத மரணங்களை உடல் ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக் கிரியைகளை நிறைவுசெய்ய வேண்டும். இதன்போது அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் 10 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.
மேலதிக நேர வகுப்புகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை, அனைத்து கடைகள், சில்லறை வியாபார நிலையங்கள், மருந்தகங்கள், சுப்பர் மார்க்ட்கள், தளபாட விற்பனை நிலையங்கள் என்பவற்றை நாளை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதியான நாளை முதல் ஒக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் இந்த வியாபாரத் தளங்களை 10 வீத கொள்ளளவுடன் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைத்து சினிமா அரங்குகளும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Kandy Tamil News)