July 4, 2022

எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் எவரேனும் கைதுசெய்யப்படும் பட்சத்தில், அதுகுறித்து அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையைப் பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பிலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

ஊடகவியலாளர்களின் கைது இடம்பெறும்போது அதுபற்றி அறிவிப்பதாக பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்துள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இனிமேல் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

சதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் வௌியான செய்தியினால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து லங்காதீப பத்திரிகையின் ஆசிரியருக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன.

அத்துடன் திவயின மற்றும் தி ஐலண்ட் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இந்த சம்பவம் தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த பின்புலத்தில் மோசடியுடன் தொடர்புடையவர்களுடன் இந்த விடயத்தை கையாளாமல், அது தொடர்பாக செய்தி வௌியிட்ட பத்திரிகையாளர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (CID) குறிவைப்பது அவமானமான செயலாகும் என்றும், இது ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தானது எனவும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே, பத்திரிகை ஆசிரியர் சங்கத்திற்கும் ஊடக அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. (Kandy Tamil News)

Leave a Reply

Your email address will not be published.