‘Ceylon Tea’ என்ற இலங்கைத் தேயிலையின் குறியீட்டு நாமம் ஜப்பானில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளதாகவும், அதனை முன்னேற்றுவதற்காக தம்மால் இயன்றளவு ஒத்துழைப்புகளை பெற்றுத் தருவதாகவும் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜப்பான் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை – ஜப்பான் நாடுகளிடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவை தொடர்பில் நினைவுகூரப்பட்டதுடன், கொவிட்-19 தொற்று பரவலின்போது ஜப்பானின தயாரிக்கப்படும் #AstraZeneca தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள உதவியமைக்காக அமைச்சர் ஜப்பான் தூதுவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இன்னும் சிறிது காலத்தில் தனது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சேவைக்காலம் நிறைவடைவதாகத் தெரிவித்த அகிரா சுகியாமா, தமது சேவைக்காலத்தில் கிடைத்த ஒத்துழைப்புகளுக்காகவும் அமைச்சரிடம் நன்றிகளைக் கூறியுள்ளார்.
இதுதவிர கொவிட் தடுப்பூசிகளை ஏற்றும் அரசாங்கத்தின் பிரயத்தனங்களைப் பாராட்டிய ஜப்பான் தூதுவர், கொவிட்-19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இது இன்றியமையாததாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து இலங்கையின் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளமை பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், ஏற்றுமதித் துறையில் தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா ஆகிய பயிர்ச் செய்கைகளில் குறிப்பிட்ட முன்னேற்றம் கிட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஏற்றுமதி சந்தையை விஸ்தரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடினார்.
அத்துடன் இலங்கையின் இளைஞர்களுக்கு ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்ட பின்னர் அந்த நாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. (kandytamilnews.com)